×

வெறுப்பு செய்தி விவகாரம்: மத்திய அரசு, டிவிட்டருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வெறுப்பு செய்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசும், டிவிட்டர் நிறுவனமும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதன் எதிரொலியாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பலர் செய்திகள் பதிவிட்டனர். இவற்றை நீக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கும், டிவிட்டருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் கோயங்கா, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர், ‘இந்தியாவில் 35 லட்சம் டிவிட்டர் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றில் 3.5 லட்சம் கணக்குகள் போலியானவை என்று தெரிய வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் தங்கள் அந்தஸ்தை உயர்த்தவும், எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டவும் இது போன்ற போலி கணக்குகளை பயன்படுத்தி, அவதூறு செய்திகள் வெளியிடுகின்றன. சமீபத்தில். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும்விதமாக சமூக வலைதளங்களில் நிறைய செய்திகள் பகிரப்பட்டன. எனவே, சமூக வலைதளங்களில் செய்திகளை நெறிப்படுத்துவதற்கான விதிகளை உருவாக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது

Tags : Supreme Court , Hate News Issue: Federal Government, Supreme Court Notice to Twitter
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து